search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து இடமாற்றம்"

    கோவில்பட்டியில் போக்குவரத்து இடமாற்ற பிரச்சனை குறித்து நடந்த பேச்சுவார்த்தை அடுத்து அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து பஸ்களையும் இயக்க முடிவு செய்யப்பட்டன.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில், கடந்த 1ந்தேதியில் இருந்து பஸ் போக்குவரத்து வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி பெரும்பாலான பஸ்கள் கோவில்பட்டி பைபாஸ் ரோட்டில் உள்ள கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு கோவில்பட்டி அண்ணா பஸ் நிலைய வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து உதவி கலெக்டர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. உதவி கலெக்டர் விஜயா தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சூரியகலா, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜூ, மோட்டார் வாகன ஆய்வாளர் அமர்நாத், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், வடக்கு மாவட்ட தலைவர் பன்னீர் செல்வம், அண்ணா பஸ் நிலைய வியாபாரிகள் சங்க தலைவர் ராஜகோபால், மினி பஸ் உரிமையாளர் சங்கம் ராஜகுரு உள்பட கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம் வருமாறு:-

    கோவில்பட்டியில் கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் புறப்பட்டு செல்லும் முடிவை தற்காலிகமாக ஒத்திவைப்பது. அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து வழக்கம் போல் அனைத்து பஸ்களும் இயக்கப்படும். அண்ணா பஸ் நிலையத்தில் மினி பஸ்கள் உரிய நேரத்தில் மட்டும் வந்து பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும். உரிமம் பெற்ற மினி பஸ்களின் விவரத்தை இந்த பஸ் நிலையத்தில் அனைவருக்கும் தெரியும் வகையில் எழுதி வைத்திருக்க வேண்டும்.

    பஸ் நிலையத்தின் உள்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சுவர்களை அகற்றுவது. இங்கு பஸ்கள் தடையின்றி செல்லவும், பஸ்களை நிறுத்துவதற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்வது. அனைத்து புறநகர் பஸ்களும் நிலையத்தின் நடுப்பகுதி வழியாக சென்று, மேற்கு புறமாக வெளியே செல்ல வேண்டும்.

    அண்ணா பஸ் நிலையத்தின் உள்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைக்கப்பட்டு இருந்தால், அதனை உடனே அகற்றுவது. இங்கு அனைத்து பஸ்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பஸ்களை இயக்க வேண்டும். அங்கிருந்து பஸ்கள் புறப்பட்டு செல்வதற்கு கூடுதல் நேரம் எடுத்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது. மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனை அனைவரும் ஏற்று கொண்டனர். #tamilnews
    ×